கவிதை # 3 - யுகபாரதி

கவிஞர் யுகபாரதி அவர்களின் சில கவிதைகள் ரசிக்க..

வளையல் :

உடைந்தால் கலங்குவாயென்று
இரப்பர் வளையல்கள் வாங்கினேன்!
நீயோ
அளவு சரியில்லையென்று
இளைக்கத் தொடங்கிவிட்டாயே!

⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪

வீடு :

ஓரங்கிழிந்த பாய்
காரைபெயர்ந்த சுவர்
ஒட்டடை படிந்த ஜன்னல்
ஓசை எழுப்பும் மின் விசிறி
கலைந்த தலையணை
கழுவாத பாத்திரம்
என்றாலும் என் வீடு இனிது !
ஏனெனில்,
எதிர் வீடு உனது...!!

⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪

பெண்:

நான் பெண்களை
மோசமானவர்களாகக் கருதுவது,
அவர்களின் நடத்தையினால் அல்ல
அன்பினால்..!
அன்பினால் 
எல்லா மோசத்தையும்
செய்துவிடுகிறார்கள்..
சமயத்தில் மோசத்தையே அன்பாகவும்..

⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪

துணை கேட்கும் இரவுகள்:

இரவுகளை துரத்த முடியவில்லை
அவை
என்னிலிருந்து வெளியேற
நிறைய கேட்கின்றன

துணையைக் கேட்கும்
அந்த இரவுகள்
என் தனிமையை பயன்படுத்திக் கொள்கின்றன

விலகவே மாட்டேன்
என்பது போல அழிச்சாட்டியம் பண்ணும்
இரவுகளிடமிருந்து தப்பிப்பது
பெரும்பாடாகிவிடுகிறது

இரவுகளால் தாக்கப்பட்டு
பின் அதிலிருந்து மீண்டவர்கள்
குடும்பஸ்தர்களாகி
உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்

இரவுகள் முதலில்
கொடுமைகளையும் பிறகு
குழந்தைகளையும் கொடுத்துவிடுகின்றன.

குழந்தைகளுக்குப் பதில் கொடுமை
அல்லது
கொடுமைக்குப் பதில் குழந்தை...

⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪

பழங்கஞ்சியும்
பயத்தந் துவையலும்
ஏர் உழும் மாமனுக்கு
எடுத்துப் போவாள்..

அவளுக்குப் பிடிக்குமென்று
ஈச்சம் பழங்களை
துண்டில் மூடித் தருவான்
அவன்..

வானம் பார்த்த பூமியில்
எப்போதும் பெய்தபடி

பிரிய மழை

⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪

காமம்:

பொங்கிவிடுமென
பதறிப் பதறி
பாலுக்கு முந்தியே
வழிந்துவிடுகிற உன்னை

தகிக்கும் இரவில்
தலையணை வாசமாக
கண் வழியே ஆயுளைக்
கரைப்பவளாக

பல் வரிசைக்கிடையே
பாசி மணியாய்
கொறித்துக் கொண்டிருக்கிறாய்
என்னை

பாதநுனியில்
பரவுகிற நதியாய்
தாகத்தோடு
மூழ்கடிக்கிறாய்

ரத்த ருசி கண்டவை
பேய்களென்றால்
முத்த ருசி கண்ட
மோகினி நீ

மக்கி மண்ணாய்ப் போக
மனமின்றி உன்னிடம்
சிக்கி சீரழிகிறதென்
காமம்.


Comments

Popular posts from this blog

கவிதை - கமல் ஹாசன்

ஓய் என் கண்ணழகியே..